அகதிகள் நாங்கள் (விகடனின் வளை தளத்தில் முகப்பு பக்கத்தில் வெளியிடப்பட்ட கவிதை)
-தெடாவூர் அன்பு.
சொந்தங்களை இழந்து
சொந்த நாட்டையும்
இழந்து
இழக்க இனி ஏதும்
இல்லாமல்
உணவுக்காக
ஊர் சுற்றும்
உணர்விழந்த
மனிதர்கள் நாங்கள்...
குடியிருந்த வீட்டை
குண்டுக்கு இரையாக்கி
குடிசை கூட இல்லாமல்
எஞ்சிய குடிகளுடன்
மிஞ்சிய மரப்படகில்
தஞ்சம் நாடி
என் இன நாட்டை
கெஞ்சி நிற்கும்
மனிதர்கள் நாங்கள்...
கன்னித் தன்மை பெரும்
முன்னே
கண்ணியமற்ற வீரர்களால்
எங்கள் மகளின் கற்பு
களவாடப்பட்டதை
நீங்கள் வெற்று
கண்களால்
வேடிக்கை பார்த்தபோது
இரத்தக் கண்ணீர் வடித்த
பெற்றோர்கள் நாங்கள்...
அப்பாவை இழந்து
அன்னையையும் தொலைத்து
நடுத்தெருவில்
நாய்களோடு எங்களை
நடமாட விட்டபோது
என் இன பூமி
அமைதி காத்த
வரலாற்று சுவட்டை
நெஞ்சில் சுமந்திருக்கும்
பிஞ்சுகள் நாங்கள்...
இரத்தம் தோய்ந்த
கைகளோடும்
இயலாமை சுமந்த எண்ணங்களோடும்
என் இளவல் பூமியில்
இடம் தேடி வந்தது
நீங்கள் இதுவரை காட்டாத
அன்பையும் அரவணைப்பையும்
அள்ளித் தருவீர்கள் என்றுதான்..
இளவல் பாசம் பகிர
இயலாவிட்டாலும்
இருக்க நல்ல இடமும்,
உடுக்க, உன்ண ஒரு
பணியும்
முகாம் சிறை தவிர்த்த
கொஞ்சம் சுதந்திரமும்
தாருங்கள்...
ஏனெனில்
இளவல்களே ஆனாலும்
இங்கு இன்னும்
அகதிகள்தான் நாங்கள்...!
No comments:
Post a Comment