காலை எழுந்து
கணவரைக் கவனித்துவிட்டு..
அரக்க பரக்க குழந்தைகளிடம்
அன்பை பரிமாறி..
சூடு பரக்கும் காபியுடன்
அத்தை மாமாவை
எழுப்பி
“சுடு தண்ணியாட்டம் இருக்கு
உன் காபி”
என்ற வழக்கமான ஏசுதல்களை
பரிசாய்ப் பெற்று..
அவருக்கு ஒரு வகை
என் குழந்தைகளுக்கு வேறு வகை
சர்க்கரை வியாதி இருப்பதால்
பெரியவர்களுக்கு ஒரு வகை
என என் அடுப்படி வேலைக்கே
அதிக நேரம் ஓடிப் போக..
எஞ்சிய நேரத்தில்
ஏதோ சாப்பிட்டு
பாதிப் பசியுடன்
அவசரமாய் ஓடினேன்
ஆபிசுக்கு பஸ் பிடிக்க..
படிக்கட்டு ரோமியோக்கள்
தாண்டி
பயங்கர நெரிசல்களின் ஊடே
நிற்க இடம் இன்றி
திணரும் தருனத்தில்
எவனோ ஒருவன் என்
இடைக் கிள்ளி
தன் சிற்றின்ப சல்லாபத்தை
சற்றும் இறக்கம் இன்றி
காட்டிப்போக..
ஐந்து நிமிட
தாமதத்தில் அவசரமாய்
அடைந்தேன் ஆபிசை..
வழக்கமான என் சீட்டில்
வேலைப் பார்க்கையில்
பக்கத்து ஆசாமிகளின்
பலான ஜோக்குகள்
காதில் விழ
அதை கண்டும் காணாமல்
கவனம் மாற்றி
கடைசி நிமிடம் வரை
கடுமையாய்
உழைத்து..
சம்பள கவர் வாங்கி அதை
கணவரிடம் கொடுத்து
சேமிக்க சில வழிகள்
சிரமப்பட்டு கண்டறிந்து
சொல்ல வாயெடுத்தேன்
அவரிடம்
”சொல்ல தேவையில்லை”-என்ற அவர்
சொன்ன வார்த்தை இது
“பெட்டை கோழி கூவி
விடியவா போகுது..”
சோர்ந்த உடலுடனும்
சுமை நிறைந்த மனதுடனும்
படுக்கை அறை நுழைந்த
என்னை
அழைத்தது என் கைபேசி..
குறுஞ்செய்தி ஒன்றை தாங்கி..
தோழி ஒருவள்
அனுப்பி இருந்தாள் அதை..
“கொஞ்சம் வேலையடி..!
தாமத வாழ்த்துக்கு
வருந்துகிறேன்..
மகளிர் தின வாழ்த்துக்கள்..!”.
No comments:
Post a Comment