என்னைப் பற்றி

My photo
ஆத்தூர், தமிழ்நாடு, India

Blog Archive

Wednesday, March 10, 2010

மகளிர்

நிறைவேறியதாம்
மகளிர் மசோதா..
இனி
நாடாளுமன்றங்களில்
பழைய எம்.பி-களின்
பினாமிகளாய்
அவர்களது
மனைவிகள்...!

வாழ்த்துக்கள்

காலை எழுந்து
கணவரைக் கவனித்துவிட்டு..
அரக்க பரக்க குழந்தைகளிடம்
அன்பை பரிமாறி..

சூடு பரக்கும் காபியுடன்
அத்தை மாமாவை
எழுப்பி
“சுடு தண்ணியாட்டம் இருக்கு
உன் காபி”
என்ற வழக்கமான ஏசுதல்களை
பரிசாய்ப் பெற்று..

அவருக்கு ஒரு வகை
என் குழந்தைகளுக்கு வேறு வகை
சர்க்கரை வியாதி இருப்பதால்
பெரியவர்களுக்கு ஒரு வகை
என என் அடுப்படி வேலைக்கே
அதிக நேரம் ஓடிப் போக..

எஞ்சிய நேரத்தில்
ஏதோ சாப்பிட்டு
பாதிப் பசியுடன்
அவசரமாய் ஓடினேன்
ஆபிசுக்கு பஸ் பிடிக்க..

படிக்கட்டு ரோமியோக்கள்
தாண்டி
பயங்கர நெரிசல்களின் ஊடே
நிற்க இடம் இன்றி
திணரும் தருனத்தில்
எவனோ ஒருவன் என்
இடைக் கிள்ளி
தன் சிற்றின்ப சல்லாபத்தை
சற்றும் இறக்கம் இன்றி
காட்டிப்போக..
ஐந்து நிமிட
தாமதத்தில் அவசரமாய்
அடைந்தேன் ஆபிசை..

வழக்கமான என் சீட்டில்
வேலைப் பார்க்கையில்
பக்கத்து ஆசாமிகளின்
பலான ஜோக்குகள்
காதில் விழ
அதை கண்டும் காணாமல்
கவனம் மாற்றி
கடைசி நிமிடம் வரை
கடுமையாய்
உழைத்து..

சம்பள கவர் வாங்கி அதை
கணவரிடம் கொடுத்து
சேமிக்க சில வழிகள்
சிரமப்பட்டு கண்டறிந்து
சொல்ல வாயெடுத்தேன்
அவரிடம்

”சொல்ல தேவையில்லை”-என்ற அவர்
சொன்ன வார்த்தை இது
“பெட்டை கோழி கூவி
விடியவா போகுது..”

சோர்ந்த உடலுடனும்
சுமை நிறைந்த மனதுடனும்
படுக்கை அறை நுழைந்த
என்னை
அழைத்தது என் கைபேசி..
குறுஞ்செய்தி ஒன்றை தாங்கி..

தோழி ஒருவள்
அனுப்பி இருந்தாள் அதை..
“கொஞ்சம் வேலையடி..!
தாமத வாழ்த்துக்கு
வருந்துகிறேன்..

மகளிர் தின வாழ்த்துக்கள்..!”.

Friday, February 5, 2010

அந்தந்த வயதுகளில்...

இருபதுகளில்...

எழு
உன் கால்களுக்கு
சுயமாய் நிற்கச் சொல்லிக்கொடு...

ஜன்னல்களை திறந்து வை..

படி..
எதையும் படி...
வாத்சாயனம் கூடக்
காமம் அல்ல-கல்விதான்
படி...

உன் சட்டைப் பொத்தான்
கடிகாரம்
காதல்
சிற்றுண்டி சிற்றின்பம் எல்லாம்
விஞ்ஞானத்தின் மடியில்
விழுந்து விட்டதால்
எந்திர அறிவுக் கொள்..

சப்தங்கள் படி
சூழ்ச்சிகள் அறி

பூமியில் நின்று
வானத்தைப் பார்
வானத்தில் நின்று
பூமியைப் பார்...

உன் திசையை தெரிவு செய்
நுரைக்க நுரைக்கக் காதலி

காதலை சுகி
காதலில் அழு..

இருபதுகளின் இரண்டாம் பாகத்தில்
மணம்புரி

வாழ்க்கை என்பது
உழைப்பும் துய்ப்பும் என்று உணர்

முப்பதுகளில்....

சுருசுருப்பில் தேனீயாய் இரு
நிதானத்தில் ஞானியாய் இரு...

உறங்குதல் சுருக்கு
உழை
நித்தம் கலவிகொள்

உட்கார முடியாத ஒருவன்
உன் நாற்காலியை
ஒழித்து வைத்திருப்பான்..
கைப்பற்று...

ஆயுதம் தயாரி
பயன்படுத்தாதே...

எதிரிகளை பேசவிடு..
சிறுநீர் கழிக்கையில்
சிரி...

வேர்களை
இடிப் பிழக்காத
ஆழத்துக்கு அனுப்பு..

கிளைகளை
சூரியனுக்கு நிழழ் கொடுக்கும்
உயரத்திற்கு பரப்பு...

நிலைகொள்.

நாற்பதுகளில்...

இனிமேல்தான்
வாழ்க்கை ஆரம்பம்

செல்வத்தில் பாதியை
அறிவில் முழுமையை
செலவழி

எதிரிகளை ஒழி..

ஆயுதங்களை
மண்டை ஓடுகளில் தீட்டு

பொருள் சேர்

இரு கையால்
ஈட்டு
ஒரு கையாலேனும்
கொடு

பகல் தூக்கம் போடு

கவனம்..
இன்னொருக் காதல் வரும்..
புன்னகை வரைப் போ
புடவை தொடாதே..

இதுவரை
இலட்சியம்தானே
உனது இலக்கு..

இனிமேல்
இலட்சியத்திற்கு நீதான்
இலக்கு...

ஐம்பதுகளில்...

வாழ்க்கை- வழுக்கை
இரண்டையும் ரசி

கொழுப்பை குறை..
முட்டையின் வெண்கரு
காய்கறி கீரைகொள்

கணக்குப்பார்

நீ மனிதனா என்று
வாழ்கையைக் கேள்..

அறுபதுகளில்....

இதுவரை
வாழ்க்கைதானே உனை வாழ்ந்தது..
இனியேனும் வாழ்க்கையை
நீ வாழ்..

விதிக்கப்பட்ட வாழ்க்கையை
விழக்கி விடு..

மனிதர்கள் போதும்

முயல்கள் வளர்த்துப் பார்
நாயோடு தூங்கு
கிளியோடு பேசு

மனைவிக்குப் பேன்பார்

பழைய டைரி எடு..
இப்போதாவது
உண்மை எழுது..

எழுபதுகளில்...

இந்தியாவில் இது
உபரி..

சுடுகாடுவரை நடந்து போகச்
சக்தி இருக்கும்போதே
செத்துப்போ

ஜன கண மன..!!!

மன்னிப்பு பரிகாரமல்ல...(படித்ததில் பிடித்தது)

ரோஸி...
அவள்..
அடுத்த பகலில் அடுப்பெரிக்க
ஒவ்வோர் இரவிலும்
விளக்கணைக்கும் ஒருத்தி...

தேதி முடிந்த
பால் கார்டாய்
பணமா அவள் மேனி
ரணமானப் பின்பு...

அவளது ஆடை மட்டுமே
அவளை
தொடச் சம்மதித்த ஒரு
பொழுதில்

அவளது வாழ்வின்
சாயுங் காலத்தில்..

அவள் கண்ணீரோடு
கர்த்தனின் ஞாபகமும்
கசிந்தது..

செய்த பாவத்துக்காய்
நானும்
சிலுவை சுமக்கலாமா...

பாவம்
தனது
சொந்த முதுகுத் தண்டையே
சுமக்க முடியாதவன்
சிலுவையை எப்படி
சேர்ந்துச் சுமப்பாள்..

படுக்கைச் சந்தையில்..
இரவிலும்
பகலிலும்
புழங்கி புழங்கி
இனிமேலும்
செல்லுபடியாகத பிறகு
அந்த நாணயாம்
கடைசியாய் வந்தது
கர்த்தரின் கஜானாவுக்கு..

கர்த்தன்
அவளுக்காக
இன்னொருமுறை
உயித்தான்..

“கர்த்தரே
இந்த
வாடகை வாழ்க்கைத்தான்
வாய்க்குமென்று தெரிந்திருந்தால்
எந்தாயின்
கர்பத்திலேயே நான்
தற்கொலை புரிந்திருப்பேன்
என்னை இரட்சிப்பீரா..

“அழாதே மகளே...
உன்
விழிநீரைத் திடைக்க வந்தால்
என்
விரலும் அழுதுவிடும்

இதற்கு காரணமாவோர் யாரம்மா..?

கண்ணீர் காசுகளைக்
கைக்குட்டையில்
சேமித்துக் கொண்டே
சிறிது நிமிந்தாள்

“மூன்றுபேர் கர்த்தரே..
மூன்று பேர்..”

“யார் மகளே
யார் யார்..?”

“மரண யாத்திரைக்கு
ஒத்திகை பார்த்த
என் மாதாவும்

வாழ்வின் யாத்திரைக்கு
நடை ஒத்திகை பார்த்த
என் மகனும்..”

“மூன்றாமவர்
யார் மகளே...?”

அவளது
விடியற்காலப் படுக்கையைப் போல்
அவளின் நெற்றியில்
ஆயிரம் சுருக்கங்கள்..

அவள்
சுட்டுவிரல் துப்பாகி
கர்த்தனைக் குறிபார்த்தது..

“நீதான் கர்த்தனே..
நீதான்
பாவிகளை ரட்சிப்பதாய்
பாவத்திற்கு நீதானே
பரிந்துரை செய்தாய்...?”

கர்த்தன்
இன்னொருமுறை
உயித்தெழாதபடி மரித்தான்..!

மதம்
ரோஸிகளுக்கு
மன்னிப்பைத்தானே வழங்குகிறது..
மறுவாழ்வை...!!?

Tuesday, November 17, 2009

நண்பர்கள்

உளிகள்

உளிகள்
-தெடாவூர் அன்பு

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் B.Sc., கணிதம் படித்துகொண்டிருந்த காலம் அது. அப்போது நடந்த ஒரு நிகழ்வு.

எப்பொதுழும் நகைச்சுவை பேச்சுக்கள் அதிகம்
நிறைந்தவர்கள் அதிகம் இருப்பதாலோ என்னவோ என் விடுதி அறை எப்போதும் நிறைந்து வழியும். அவ்வபோது சீரியசாகவும் பேச்சுப் போகும்.
எல்லோரும் தான் வளர்ந்த பிறகு என்னென்ன செய்யப் போகிறார்கள் என ஒரு பட்டியலே நீளும். நானும் நிறையக் கருத்துக்கள் கூறுவேன். சமூகத்தில் நாம் எப்போதும் மற்றவர்களுக்கு பயன்படும்படியாகத்தான் வாழவேண்டும் என அடிக்கடி என் நண்பர்களிடம் அரட்டை அடிப்பதும் உண்டு.
என்னுடைய இந்த கருத்தை அமோதிக்காதவர்கள் யாருமே இல்லை..

இப்படியே என் கல்லூரி வாழ்க்கை ஓடிகொண்டே இருந்தது...

ஒரு நாள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் செல்ல திருச்சி அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் நானும் என் நண்பன்
முருகனும்(B.Sc-Botony) பேருந்துக்காகக் காத்துக்கொண்டிருந்தோம். அவன் வகுப்புத் தோழன் ஒருவன் அந்த வழியே வர முருகன் அவனிடம் பேசிகொண்டிருந்தான்.
நான் பேருந்து வருகிறதா என்பதிலேயே கவனமாக இருந்தேன்.

அப்போது ஒரு குரல் என் காலடி அருகே கேட்டது..

“தம்பீ, என் லுங்கியை கொஞ்சம் கட்டி விடரையா.. கெஞ்சி கேட்டுகறேன்...”
-என்னைத்தான் அப்படி அழைத்தார் அவர்..
அவர் பார்கவே அருவெருப்பாக, அழுக்கு படிந்த உடையோடு, குஷ்ட நோய் கொண்டு, கைகளில் விரலே இல்லாமல்.. எனக்கு பார்க்கவே கூசியது.
அவ்வளவு அருவெருப்பு. என் நண்பன் இது எல்லாம் கவனிக்காமல் தன் நண்பனிடம் அரட்டையை தொடர்ந்துகொண்டே இருந்தான். நானும்
ஒன்றும் தெரியாதவன் போல சற்று விலகி சென்றுவிட்டேன். ஒரிரு நிமிடங்கள் ஆகி இருக்கும்.. முருகன் எனை அழைப்பது கேட்டது..
திரும்பி பார்த்தேன்...

அங்கு.. தன் இரு கைகளாலும் அந்த குஷ்ட நோய் தாக்கி இருந்த மனிதரை பின்புறம் நின்று அனைத்து தூக்கிப்பிடித்திருந்தான்.. அவர் கிட்டத்தட்ட
நிர்வாணமாய் இருந்தார்...
”வாடா அன்பு.. அந்த லுங்கியை கொஞ்சம் எடுத்துக் கட்டிவிடுடா.. சீக்கிரம்...”-

ஓடிப்போய் கீலே கிடந்த அவரது லுங்கியை எடுத்துக் கட்டிவிடேன்.. அவரும் நன்றியோடு எங்களை பார்த்தார்..

“பாவம்டா அவரு.. நான் என் பிரண்டுகிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்ல.. அதனால இவரை கவனிக்கலை.. நீயும் பாவம் கவனிக்காம பஸ்சை பார்த்துக்கிட்டு
இருந்திட்டே...”

என்ன மனசு இவனுக்கு...

”முருகா.. உனக்கு அந்த சீல் வடியும் மனிதனைத் தொட அருவெருப்பா இல்லையா ..”

“முன்னெல்லாம் இருந்துச்சிடா.. இப்போல்லாம் கிடையாது.. நீதான்டா அடிக்கடி சொல்லுவ.. மத்தவங்களுக்கு பயன்படும்படி வாழனம்னு... அதுல ஒரு சுகமும்
இருக்குடா.. நான் உனக்குத்தான் தேங்ஸ் சொல்லனும்.. இப்படி ஒரு எண்ணம் என் மனசுல வர உன் பேச்சுதான் காரணம் அன்பு..”

எனக்கு என்னவோ செய்தது..

“சாரிடா...”

”எதுக்கு சாரி...”

பதில் சொல்லாமல் நின்றேன்... சரியான பேருந்து இப்போது வந்தது... இனி போகவேண்டிய இடம் தெளிவாகத் தெரிந்தது...

அன்பு