ரோஸி...
அவள்..
அடுத்த பகலில் அடுப்பெரிக்க
ஒவ்வோர் இரவிலும்
விளக்கணைக்கும் ஒருத்தி...
தேதி முடிந்த
பால் கார்டாய்
பணமா அவள் மேனி
ரணமானப் பின்பு...
அவளது ஆடை மட்டுமே
அவளை
தொடச் சம்மதித்த ஒரு
பொழுதில்
அவளது வாழ்வின்
சாயுங் காலத்தில்..
அவள் கண்ணீரோடு
கர்த்தனின் ஞாபகமும்
கசிந்தது..
செய்த பாவத்துக்காய்
நானும்
சிலுவை சுமக்கலாமா...
பாவம்
தனது
சொந்த முதுகுத் தண்டையே
சுமக்க முடியாதவன்
சிலுவையை எப்படி
சேர்ந்துச் சுமப்பாள்..
படுக்கைச் சந்தையில்..
இரவிலும்
பகலிலும்
புழங்கி புழங்கி
இனிமேலும்
செல்லுபடியாகத பிறகு
அந்த நாணயாம்
கடைசியாய் வந்தது
கர்த்தரின் கஜானாவுக்கு..
கர்த்தன்
அவளுக்காக
இன்னொருமுறை
உயித்தான்..
“கர்த்தரே
இந்த
வாடகை வாழ்க்கைத்தான்
வாய்க்குமென்று தெரிந்திருந்தால்
எந்தாயின்
கர்பத்திலேயே நான்
தற்கொலை புரிந்திருப்பேன்
என்னை இரட்சிப்பீரா..
“அழாதே மகளே...
உன்
விழிநீரைத் திடைக்க வந்தால்
என்
விரலும் அழுதுவிடும்
இதற்கு காரணமாவோர் யாரம்மா..?
கண்ணீர் காசுகளைக்
கைக்குட்டையில்
சேமித்துக் கொண்டே
சிறிது நிமிந்தாள்
“மூன்றுபேர் கர்த்தரே..
மூன்று பேர்..”
“யார் மகளே
யார் யார்..?”
“மரண யாத்திரைக்கு
ஒத்திகை பார்த்த
என் மாதாவும்
வாழ்வின் யாத்திரைக்கு
நடை ஒத்திகை பார்த்த
என் மகனும்..”
“மூன்றாமவர்
யார் மகளே...?”
அவளது
விடியற்காலப் படுக்கையைப் போல்
அவளின் நெற்றியில்
ஆயிரம் சுருக்கங்கள்..
அவள்
சுட்டுவிரல் துப்பாகி
கர்த்தனைக் குறிபார்த்தது..
“நீதான் கர்த்தனே..
நீதான்
பாவிகளை ரட்சிப்பதாய்
பாவத்திற்கு நீதானே
பரிந்துரை செய்தாய்...?”
கர்த்தன்
இன்னொருமுறை
உயித்தெழாதபடி மரித்தான்..!
மதம்
ரோஸிகளுக்கு
மன்னிப்பைத்தானே வழங்குகிறது..
மறுவாழ்வை...!!?
No comments:
Post a Comment